டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி 180 பேருடன் புறப்பட்ட ‘ஃபிளை டுபாய்’ விமானத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் துணிச்சலுடன் சமாளித்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ அழைப்பில் உரையாடினார்.
செப்டம்பர் 30ஆம் திகதி காலை புறப்பட்ட அந்த விமானத்தில் 174 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 6 பேர் இருந்தனர். இந்திய விமானி ஸ்மித் மச்சார் விமானத்தை இயக்கிய நிலையில், ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானியும் அவருடன் பணியில் இருந்தார்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அறையில் இருந்த கோடரியால் துணை விமானி ஸ்மித் மச்சாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மச்சார், நிலைமையை எதிர்கொண்டு போராடியதுடன், விமானி அறையின் கதவை திறக்கவும் நடவடிக்கை எடுத்தார். பின்னர் சக பயணிகளின் உதவியுடன் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ள ஸ்மித் மச்சாரை பிரதமர் மோடி வீடியோ அழைப்பில் தொடர்புகொண்டு பாராட்டினார். அவரது துணிச்சலான செயலால் பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும், அவரை நினைத்து நாட்டு மக்கள் பெருமைப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், ஸ்மித் மச்சாரின் தாயாரிடமும் பிரதமர் மோடி உரையாடி, அவரின் வளர்ப்பை பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருடனான உரையாடலில் ஸ்மித் மச்சார், “தாக்குதலில் எனக்கு அதிகளவில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் நான் செயல்பட வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். 11 ஆண்டுகளாக விமான கேப்டனாக பணியாற்றி வருவதால், விமானத்தில் என்ன நடக்கிறது என்பதை உடனடியாக புரிந்துகொள்ள முடிந்தது. அந்த அனுபவமே அந்த நேரத்தில் செயல்பட எனக்கு உதவியது” எனக் கூறினார்.
விமானத்தில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் விமானி ஸ்மித் மச்சார் மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

1 thought on “விமானத்தில் 180 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி – பிரதமர் மோடி பாராட்டு”
Comments are closed.