தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.
இதன் ஒரு பகுதியாக, நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு இளைஞர் ஒருவர் தூக்கு காவடி எடுத்து வந்து, தியாக தீபத்தின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவு தின நிகழ்வுகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் இறுதி நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள், அங்கிருந்து நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் நோக்கி பேரணியாகச் சென்று இறுதி நாள் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கிளிநொச்சியிலிருந்தும் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படங்கள் தாங்கிய ஊர்திகள் நினைவாலயத்தை வந்தடைந்திருந்தன.
அங்கு திரண்டிருந்தவர்கள் தியாக தீபம் திலீபனுக்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

