லெப். பரமதேவா – ராஜா
(இராமலிங்கம் பரமதேவா) மட்டக்களப்பு.
பிறப்பு: 30. 10. 1956
வீரச்சாவு:
22. 09. 1984
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
1983 செப்ரெம்பர் 23 ஆம் திகதி , மட்டக்களப்புச் சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு வெளியேறுகிறான் பரமதேவா.
1984 செப்ரெம்பர் 22 ஆம் திகதி.களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைகிறான் பரமதேவா.மட்டக்களப்புச் சிறை உடைப்புச் சம்பவத்தைப் புதியதோர் திருப்பம் என்றும் ஓராண்டு நிறைவு என்றும் சிலர் கூட்டம் நடத்திக்கொண்டிருந்த போது சரியாக அதற்கு முதல் நாள், ஒரு பொலிஸ் நிலையத்தின்மீது ஆயுத சன்னதனாய் கெரில்லாத்
தாக்குதலை இந்த வீரமகள்முன்னின்று நடத்துகிறான்
ஒரு விடுதலை வீரனின் வாழ்க்கை இப்படித்தான் அமைய முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்புப் பிரிவுத் தாக்குதற்படைத் தளபதியான லெப்ரினன்ட் இரா. பரமதேவா, சிங்களப் பொலிஸ் கொமாண்டோக்கள் நிறைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் மீதான தாக்குதலுக்குத் தலைமை தாங்கினான். அஞ்சாநெஞ்சினனாக முன்னணியில் நின்று போரிட்ட பரமதேவா, களத்திலேயே வீரமரணமடைந்தான்.
பரமதேவா மட்டக்களப்பு மண் ஈந்த வீரமகன். இருபத்தெட்டு வயதான பரமதேவா, நன்கு பயிற்றப்பட்ட கெரில்லாப் போராளியாவார். பத்தொன்பது வயது மாணவனாக மட்டக்களப்பு அரசினர் கல்லூரியின் உயர்வகுப்பு மாணவனாக இருந்த காலத்திலிருந்தே, சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில், பரமதேவா துடிப்போடு பங்குகொண்டிருக்கிறான்.
1975 மே மாதம் 22 ஆம் திகதி, சிறீலங்கா அரசின் குடியரசு தினத்தைப் பகிஷ்கரித்து மாணவர்களை அணிதிரட்டிப் பேராடியமைக்காகப், பாடசாலையிலிருந்தே பரமதேவா நீக்கப்பட்டிருக்கிறான்.1977 ஆம் ஆண்டில் மட்டுநகரில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, சிறீலங்காப் பொலிசாரால் தேடப்பட்ட பரமதேவா, அந்த இளம்வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற் கொண்டான்
1978 இல் இயக்கத் தேவைகளுக்காக செங்கலடி மக்கள் வங்கிப் பணத்தைப் பறித்தெடுப்பதில் ஈடுபட்ட பரமதேவா, பொலிசாருடன் நடத்திய சண்டையில், கையின் மேற்பாகத்தில் குண்டு பாய்ந்த நிலையில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டான். 1981 இல் சிறீலங்கா அரசு, விடுதலை வீரன் பரமதேவாவிற்கு எட்டு வருடக் கடுங்காவல் தண்டனையை வழங்கியது. நீதிமன்றத்தில் கூடியிருந்தோர் இத்தண்டனையைக் கேட்டுக் குமுறி அழுத போதும். பரமதேவா எப்போதும் போலச்சிரித்து முகத்தோடு அந்தத் தண்டனையை ஏற்றுக் கொண்டான்.

தமிழீழ விடுதலைப் போராளிகளில் நீண்டகாலச்சிறைவாசம் அனுபவித்தவன் பரமதேவா. போஹம்பர, வெலிக்கடை, நியூமகசீன், மகர ஆகிய சிறைச்சாலைகளிலெல்லாம் சிறைவாசம் அனுபவித்த பரமதேவா, சிங்களக்கைதிகளின் மத்தியிலும் . மரியாதைக்குரியவனாக இருந்திருக்கிறான்
1971 ஆம் ஆண்டு ஏப்ரில் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள அரசியற்கைதிகளுடன், சிறைச்சாலையில் பயன் மிகுந்த சர்ச்சைகளைப் பரமதேவா நடத்தியிருக்கிறான்.
ஜூலை மாதம், வெலிக்கடையில் தமிழ் அரசியற்கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதையடுத்து, மட்டக்களப்புச்சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியற்கைதிகளில், பரமதேவாவும் ஒருவனாக இருந்தான்.
1983 செப்ரெம்பர் 23 ஆம் திகதி,மட்டக்களப்புச் சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு தமிழீழ விடுதலைப் போராளிகள் வெளியேறிய வெற்றிகரமான நடவடிக்கைகளில், பெரும்பங்கு வகித்தவன் பரமதேவா. சிறையிலிருந்து தப்பியதும் அவன் ஓய்ந்து போய் நின்றுவிடவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டப்பாதையின் மூலமே தமிழீழ இலட்சியத்தை அடையமுடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்ட பரமதேவா, விரைவிலேயே தமிழீழ மண்ணில் தனது கெரில்லாப்போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினான்.விடுதலைப்புலிகள் ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்தின்மீது நடத்திய வெற்றிகரமான கெரில்லாத்தாக்குதலில், பரமதேவாமுன்னணி வீரனாக நின்று செயற்பட்டான். கொக்கிளாயில் சிங்கள இராணுவத்தின் மீதான கெரில்லாத் தாக்குதலிலும் பரம தேவா முன்னின்றான்.என்றும் சிரித்த முகத்தோடு காட்சி தரும் பரமதேவாவின் கூர்மையான அறிவையும், விடுதலைப் போராட்டத்தையும், போர்க்குணதிதையும் மாறுபட்ட விடுதலை இயக்கங்கள்கூட அங்கீகரிக்கின்றன.
கிழக்கு மாகாணத்தில் பரமதேவாவின் பெயரைத் தெரியாதவர்கள் யாருமே இல்லை ,
பரமதேவாவுடன் சேர்ந்து களுவாஞ்சிக் குடி பொலிஸ் நிலையத் தாக்குதலில் முன் னின்று போராடிய, மகிழடித் தீவைச் சேர்ந்த ரவி எனப்படும் தம்பிப்பிள்ளை வாமதேவன் என்ற இளம் கெரில்லாப் போராளியும், களத்திலேயே வீரமரணமடைந்தான்.
தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி வீரமரணமடைந்த லெப்ரினன்ட் இராமலிங்கம் பரமதேவாவுக்கும், தம்பிப்பிள்ளை வாமதேவனுக்கும், தமிழீழ் விடுதலைப் புலிகள் தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்துகிறார்கள்,
வெளியீடு :-விடுதலைப்புலிகள் குரல் -5 (டிசம்பர் 1984)
