தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, அவரது உருவம் தாங்கிய நினைவூர்தி வவுனியா மாவட்டத்தை வந்தடைந்த நிலையில், பொதுமக்கள் திரண்டு உணர்வுபூர்வமாகச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பயணிக்கும் இந்நினைவூர்தி வவுனியாவை வந்தடைந்தபோது, நகரின் முக்கிய இடங்களில் மக்கள் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டது.

இதன்போது, வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்ட தளத்திற்கு முன்பாகவும், பொங்கு தமிழ் நினைவுத் தூபிக்கு முன்பாகவும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்குத் தீபமேற்றி, மலர் தூவித் தமது உணர்வுபூர்வமான அஞ்சலியைச் செலுத்தினர்.



