இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 49,344 குடும்பங்களில் 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தின் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 8 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்காலிகமாக நாவலப்பிட்டிய பவ்வாகம வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மணிநேரங்களில் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட பகுதியில் அதிகபட்சமாக 119 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் ஹங்வெல்ல, எல்பிட்டிய, நெலுவ, துன்ஹிந்த, வத்துரவில மற்றும் நாவுல உள்ளிட்ட பகுதிகளிலும் 50 முதல் 119 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதனிடையே, எட்டு மாவட்டங்களில் நிலவும் எல் நினோ தாக்கம் காரணமான வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளில் 141,312 பேருக்கு நீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, மாத்தளை, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல குழப்பம் காரணமாக மேல், மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பகுதிகளிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிவிப்புகளை அவதானிக்குமாறும், மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு தொடர்பான முன் எச்சரிக்கைகளை கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனர்த்த நிலை ஏற்படும் பட்சத்தில் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது
