18-03-92 அன்று காலை எங்களூர் வாசிகசாலைக்கு வந்த ஈழநாதம்’பத்திரிகை யைப் படிப்பதற்கு எல்லோரும் ஒரே நேரத் தில் முண்டியடிப்பதைப் பார்த்தேன். என்ன விஷயம் என்று நானும் எட்டிப்பார்த்தேன். அதற்கு முதல் நாள், மணலாற்றில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 26 இரா ணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மூன்று கவச வண்டிகள் அழிக்கப்பட்டதாகவும் அப்பத்திரிகைச் செய்தி தெரிவித்தது இத்தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங் களின் மிக நீண்ட பட்டியலில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருந்த 106. மி. மீ.எம்.- 40 பின்னுதைப்பற்ற பீரங்கியின் (R.C.L.) படத்தைப் பார்ப்பதற்கே இத்தனை பேரும் முண்டியடிக்கிறார்கள் எனப் புரிந்து கொண் டேன்.அதனுடைய நிறை, சுடுதிறன் போன்ற அம்சங்களை வாசித்த இரு இளைஞர்கள் அதைப்பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர் அவர்களில் ஒருத்தன், “அப்ப இஞ்சை இருந்தே பலாலிக்கு அடிக்கலாம் -பேந்தென்ன, ” என்றான், அதற்கு மற்றவன். “அடிக்கலாம் தானடப்பா.. ஆனா, அஞ்சு ஷெல் தானே கிடைச்சிருக்கு” என்றான். அஞ்செண்டா என்ன? … உந்தப் பசீலன், அருள் எயிற்றினைன் எல்லாம் செய்யிறாக்களுக்கு உதுக்கு ஷெல் செய்யிறது பெரிய வேலையே? என்றான். முன்னவன். அதற்கு மற்றவன்’ ஓமடாப்பா’ …அதுவும் சரிதான். ஆனா, காசு தான் கனக்கவேணும். இப்பவே போராட்டத்தின்ர பேரால பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பியிட்டு பவுணுக்குச் சுத்துதுகள் சிலதுகள் !” என்றான். தொடர்ந்து இதைப் பற்றியே இன்னும் ஏதோவெல்லாம் பேசிக் கொண்டார்கள்.
இந்த இளைஞர்களின் உரையாடலை வழக்கமாக சந்தியில் நின்று பொழுது போக்காக புதினம் கதைக்கும் விடயமாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை, இந்தத் தேசத்தை நேசிக்கும் மனப்பான்மை தெரிந்தது. அத்துடன் இராணுவ ரீதியாக சிந்திக்கும் – கதைக்கும் பக்குவத்தை எமது மக்கள் பெற்றுவிட்டார்கள் என்பதை உணரும் போது மகிழ்ச்சியாக இருந்தது. “வரலாறு யாருக்காகவும் காத்திருப்பதில்லை,” என எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.
“பின்னுதைப்பற்ற பீரங்கி'” என்ற சொல் லைப் படித்தவுடன் 1983 ஆம் ஆண்டின் முதற்பகுதிக் காலங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன.அரசியல் ரீதியாக எமக்கும் கூட்டணியினருக்கும் பலப்பரீட்சை நடந்த காலகட்டம் அது.சிறீலங்கா அரச நிர்வாகத்துக்கான சகல தேர்தல்களையும் பகிஷ்கரிக்கக்கோரி வந்த நாம் அந்தக் காலத்தில் நடைபெறவிருந்த உள்ளூராட்டசி மன்றங்களுக்கான தேர்தலில் எமது கோரிக்கையை மேலும் வலியுறுத்திய காலம் அது -மிக முக்கியமான பல சம்பவங்கள் நடந்த காலமுங் கூட
அந்த காலத்தில் கூட்டணிச் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் கூறினார் ஓர் இனத்தை விடுதலைப்பாதையில் இட்டுச் செல்வதற்கு துப்பாக்கியில் குண்டுகள் மட்டும் இருந்தால் போதாது துப்பாக்கியால் எதையும் சாதிக்கலாம் என்பது மடமைத்தனமாகும் துப்பாக்கிக்கு மேல் பீரங்கி வரலாம் என்பதையும் துப்பாக்கி ஏந்தும் இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் (யாழ் நாவாந்துறையில் இடம் பெற்ற கூட்டணிக் கருத்தரங்கில்-18-5-1983 சுதந்திரன்)எந்த ஒரு வன்முறை இயக்கத்திலும் இளைஞர்களைச் சேரவிடாது அவர்களது மனதில் தளர்ச்சியுண்டாக்க எம்மாலான முயற்சிகளைச் செய்து வருகின்றோம் (29-11- 1981 ISLAND) என்று கூறிய அவர் தமது முயற்சிகள் வெற்றியளிக்காத நிலையிலேயே இவ்வாறு கூறினார்.
ஒரு காலத்தில் இத்தாலிய இளைஞர்களை கரிபால்டி அழைத்ததுபோல் இங்குள்ள இளைஞர்களை நான் அழைக்கின்றேன் என்று அழைப்பு விடுத்த வாய்தான் பின்னர் பீரங்கிப் பூச்சாண்டி காட்டியது போராட்டத் தைரியமில்லாத தாங்கள் ஒதுங்க வேண்டுமென்று அவர் நினைக்கவில்லை
எனது மகன் பாடசாலைப் படிப்பை மண்ணாக்கி விட்டதைப் பார்த்து விட்டேன் .மருத்துவக் கல்லூரியில் பயிலும் எனது இளைய மகனும் அப்படி ஆவதைக்காண நான் விரும்பவில்லை- (22.09.82 SUN) என்று சொன்ன காலத்திலேயே அவர் குடும்பப் பொறுப்புள்ள அப்பா என்ற பதவியுடன் கௌரவமாக ஒதுங்கியிருக்கலாம். ஆனால் அவர் உயிருக்கு உயிராக நேசித்த பாராளுமன்ற ஆசனம் அதற்கு தடையாக அமைந்துவிட்டது.
அந்த காலத்தில் அவரது இன்னொரு பிரபலமான வாதம் நான்கு துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு இளைஞர்களால் என்ன செய்ய முடியும்? என்பது ஒரு வருஷத்துக்கு முன்னர் தான் தம்பி மார் ஒரு சிலர் துப்பாக்கியைக் கையில்-அதுவும் மறைத்து-வைத்துக்கொண்டு ஏதோ எல்லாம் கண்டுவிடலாம் என்று கனவு காண்கிறார்கள் (பண்ணாகம் கூட்ட உரை-ஈழநாடு 28.04.1982) என்று கூறிய அவர் பின்பு 1983 ஆம் ஆண்டு நாலு துப்பாக்கியை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் ?என்று கேட்கிறார்.அவரது கணிப்பை கொண்டே அவர் உணர்த்திருக்க வேண்டும்-1982 ல் ஒரு துப்பாக்கி வைத்து இருந்தவர்கள் 1983-ல் அதை நான்கு மடங்காக்கியிருக்கின்றார்கள் என்று-வருடா வருடம் முன்னைய வருடங்களை விட நான்கு மடங்காக ஆயுதபலத்தைப் பெருக்க கூடிய ஆற்றலுள்ளவர்களால் ஏன் விடுதலையைப் முடியாதென்று!
நாலு துப்பாக்கிக் கதையை கேட்டவுடன் தலைவர் 08.05.1983 அன்று திரு அமிர்தலிங்கம் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு (யாழ் ஐந்து சந்தியில் நடைபெற்றது) செல்லக்கிளியம்மான் ,பொன்னம்மான்,கிட்டு, சீலன், முதலானவர்களை அனுப்பி வைத்தார்.சிறீலங்கா அரசிடம் திரு அமிர்தலிங்கம் தனது பாதுகாப்புக்காக வாங்கிய துப்பாக்கியை அவரது மெய்ப்பாதுப்பாளரிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டு வருமாறு கூறியிருந்தார் துப்பாக்கியைக் கைப்பற்றியவுடன் நாலு துப்பாக்கியுடன் உங்களது துப்பாக்கியையும் சேர்த்து ஐந்தாக வைத்திருக்கின்றோம் என்று சொல்லிவிட்டு வருமாறும் கூறியிருந்தார் ஆனால் மெய்பாதுகாவலர் அக் கூட்டத்தின்போதுகாணப்படவில்லை.எங்கு தேடியும் அகப்படவில்லை ஆகவே போனவர்கள் வானத்தை நோக்கி சுட்டு கூட்டு கூட்டத்தை நிறுத்தினர்.பயந்து ஓடிய மக்களை உங்களை ஒன்றும் செய்யமாட்டோம் என்று கூறி அவர்களது பதற்றத்தை தணிய வைத்தார்கள் பின்னர் செல்லகிளி அம்மான் அமிர்தலிங்கத்தை பார்த்து கேள்வி கேட்டார் முப்பது வருஷமாக என்ன செய்தனிங்கள்?நாங்கள் இஞ்ச பத்துவருஷமா அலையிறம் இந்த நேரத்திலயும் தேர்தல் தேவையா?இந்த கேள்விகளுக்கு அவரால் என்ன பதில் கூற முடியும்?பின்னர் நான் மாட்டன் மாட்டன் எண்டுதான் சொல்லுறன்.திரும்பத் திரும்ப இவரோடதான் எனக்கு டியுட்டி போடுயினம் என்று சலித்துக்கொள்ளும் அவரது சாரதியிடம் அவரது காரின் திறப்பை வாங்கிக்கொண்டு அதில் ஏறிச் சென்றனர்.அந்த ஐந்தாவது துப்பாக்கி கிடைக்காத ஆத்திரத்தை கோம்பயன் மணல் சுடலையடியில் இருந்த மதகுடம் அவரது காரை மோதி தணித்துக்கொண்டனர்.அந்த காலத்தில் கூட்டணியினருக்கு ஒரு விசித்திரமான சங்கடம் ஏற்பட்டது இது பொதுவாக தேர்தலில் போட்டியிடும் எவருக்குமே ஏற்படாதது.
இத்தேர்தலில் கூட்டணி ஐ.தே.க தமிழ்க் காங்கரஸ் ஆகிய 3 கட்சிகள் போட்டியிட்டன.(பருத்தித்துறையில் மட்டும் நவசமசமாயக் கட்சியும் போட்டியிட்டது)
பருத்தித்துறை நகரசபைக்குபோட்டியிட்ட தலைமை வேட்பாளர் இரத்தினசிங் சிங்கம் வல்வெட்டிதுறை அமைப்பாளர் இராசரத்தினம் சாவகச்சேரி நகரசபைக்குப் போட்டியிட்ட தலைமை வேட்பாளர் முத்தையா ஆகிய ஐ.தே கட்சியினருக்கு ஒரே நாளில் எம்மால் மரணதண்டனை வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து ஐ.தே கட்சியின் வேட்பாளர்கள் நாளாந்தம் நாங்கள் போட்டியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகுகின்றோம் என்று ஈழநாடு பத்திரிகைக்கு அறிக்கை விடுத்தனர் அத்துடன் தப்பித்தவறி அவர்களைத் தேடி நாங்கள் சென்றால் எமக்குக் காட்டுவதற்காக ஈழநாடு பத்திரிகைப் பிரதியையும் கைவசம் வைத்துக்கொண்டு இருந்தனர்.இதன் உச்ச கட்டமாக சாவகச்சேரியில் போட்டியிட்ட ஐ.தே.க வேட்பாளர்கள் கூட்டாக ஒரே கடிதத்தில் தமது ராஜினாமாவை அனுப்பியிருந்தனர்.
தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் இரட்டையர்களான திரு.குமார் பொன்னம்பலம் மோதிலால் நேருவையும் சீலன்,பண்டிதர், ரகு(குண்டப்பா),நான் ஆகிய நால்வரும் சென்று சந்தித்து இத் தேர்தலிருந்து உங்கள் கட்சி விலகிக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டிருந்தோம். அதன்படி காங்கிரசும் இத்தேர்தலிலிருந்து தாங்கள் வாபஸ் பெறுவதாகவும் இத் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்றும் கோரியிருந்தது (இதற்குள் கூட்டணியின் யாழ் மாநகர சபைதலைமை வேட்பாளர் சட்டத்தரணி நாகராஜா இரு தடவைகள் ராஜினாமாச் செய்திருந்தார்.)
போட்டியிடும் 3 கட்சிகளுள் காங்கிரஸ் முற்றாகவே விலகிவிட்டது ஐ.தே கட்சி வேட்பாளர்கள் கட்சியிலிருந்தே விலகி விட்டனர்.இந்நிலையில் யாருடன் போட்டி?இப்படியும் ஒரு சிக்கல் அவர்களுக்கு ஏற்பட்டது இதற்காக திருநெல்வேலி ஆடியபாதம் வீதியிலிருந்த கூட்டணியின் தலைமைக் காரியாலயத்தில் கூடினர். ஒவ்வொரு கூட்டணி வேட்பாளர் வீட்டிற்கும் சென்று அவர்களிடம் எமது கோரிக்கையை ஏற்றுப் பகிஷ்கரிக்கும்படி கேட்டு வரும்போது அவர்களது மனைவியரிடம் அக்கா நீங்கள் ஒருக்கா விளங்கப்படுத்துங்கோ என்று வேண்டுகோள் விடுத்துக் கொண்டு வரும் வழியில்தான் இப்படியொரு கூட்டம் இன்று இருக்கின்றது என அறிந்தோம் இது நல்ல சந்தர்ப்பம்;எல்லா வேட்பாளரையும் ஒரே இடத்தில் சந்திக்கலாம் எனவே செல்லக்கிளி, அம்மான், பொட்டு, நான், ஆகிய மூவரும் அங்கே சென்றோம்.எனக்கு கவலையேற்படும் போதெல்லாம் நான் இந்தக் காட்சியைத் தான் நினைப்பேன். இக்காட்சி சூழ்நிலையை மறந்து என்னைச் சிரிக்க வைக்கும் ஒரு கதிரையில் அமிர்தலிங்கம் உட்காந்திருந்தார்.அவரைச் சூழ வேட்பாளர்கள் நின்றிருந்தனர் கூட்டத்தோடு கூட்டமாக நாங்களும் அவர்களிடையே கலந்துகொண்டோம்.சில வேட்பாளர்களுக்கு மட்டுமே விஷயம் புரிந்தது.சிலர் செல்லகிளி அம்மானை அடையாளங் கண்டு கொண்டனர்.பொட்டுவையும் கூட்டணியில் சிலருக்குத் தெரிந்திருந்தது.இதில் நான் மட்டுமே யாரோ ஒரு இளைஞன்.விஷயம் தெரிந்தவர்கள் பேசாமல் நிற்க மற்றவர்கள் கையைக் கட்டிக் கொண்டு திரு.அமிர்தலிங்கத்துடன் கதைத்துக்கொண்டு கொண்டிருந்தனர்.இவன் பிரபாகரன் எங்களை றிசைன் பண்ண சொல்லுறான் என்று தயங்கித் தயங்கி சொன்னதும் அமிர் சீறி விழுந்தார் பிரபாகரன் யார் ஆர் சொல்லுறதுக்கு நான் சொல்லுறன் தேர்தலில நில்லுங்கோ எண்டு “
இதற்குள் ஒவ்வொருவரும் ஆளுக்காள் சைகை காட்டி மெல்ல விலகத் தொடங்கினர்.கூட்டமாக போனால் விஷயம் விளங்கிவிடும் என்பதால் ஒவ்வொருவராகப் போய் அந்த வீட்டுக் கேற்றடியில் நிற்கத் தொடங்கினர்.ஒரு மாதிரியாக திரு அமிருக்குப் பக்கத்தில் நின்றவருக்கும் விஷயம் விளங்கிவிட்டது.அவரின் தலைவருக்கு விஷயத்தை சொல்ல வேண்டும்.எதிரிலோ நாங்கள் மிகப்பரிதாபமான நிலையில் இருந்தார் அவர் உஷ்…..உஷ் என்றவாறே தலையைச் சொறிந்தார் திரு.அமிர் …..என்னடா
..என்னடா….என்னெண்டு சொல்லடா என்றார்.அவர் எப்படிச் சொல்வார்… பாவம் எங்களுக்குச் சிரிப்பையடக்க முடியவில்லை. மெல்ல அங்கிருந்து விலகி வாசலுக்கு வந்தோம்.அவ்வளவுதான் .கூட்டணித் தலைமை காரியாலயத்தில் உள்ள மணியண்ணையும் யாழ்.எம்.பி யோகேஸ்வரனையும் தவிர ஏனையோர் அனைவரும் வாசலுக்கு வந்துவிட்டனர். வாசலில் எமது கருத்தரங்கு தொடங்கியது நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமலிருங்கோ! என்ற ஆரம்ப வேண்டுகோளுடன் செல்லக்கிளி அம்மான் கருத்தரங்கை ஆரம்பித்தார்.உள்ளேயிருந்து வந்த திரு.யோகேஸ்வரன் பெருவிரலில் நின்று எட்டிப்பார்ப்பதும் திரு அமிர்தலிங்கத்திடம் ஓடுவதுமாக இருந்தார்.எமது கருந்தரங்கு முடியும் வரை இது நடந்தது.பொட்டுவும் நானும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோம்.(இத் துண்டுப் பிரசுரத்தின் வாசகங்களை தலைவரே தயாரித்திருந்தார்.)
ஏன் இந்தத் தேர்தலை நீங்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்பதற்கான நியாயங்களையும் கூட்டணித் தலைமையின் துரோகத்தனத்தையும் செல்லக்கிளி அம்மான் வெளிப்படுத்தினார்.கொஞ்சங் கொஞ்சமாக வேட்பாளர்களுக்கு எம் மீதிருந்த பயம் மறையலாயிற்கு.பின்னர். அவர்கள் கேள்விகளை கேட்டனர் மூவரும் மாறி மாறிப் பதிலளித்தோம்.(மாதிரிக்கு இரண்டு)
கேள்வி:எதிர்க்கட்சித் தலைவர் பதவியிருந்தால் எங்கட போராட்டத்தைப் பிரச்சாரப்படுத்த
வாய்ப்பெல்லோ?
பதில்:(செல்லக்கிளியம்மான்)
என்னத்தைப் பிராச்சாரப்படுத்தப் போறிங்கள்?இந்தியாவில் அணிசேரா மாநாடு நடந்தது அமிர்தலிங்கம் என்ன செய்தவர்?ஜே.ஆ ரோடு பேசவே அவருக்கு நேரம் போதாது! என்ன பிரச்சாரம் செய்தனீங்க? அங்கெ வந்த ஒவ்வொரு நாட்டுத் தலைவருக்கும் எங்கட பிரச்சனையை நாங்களும் புனொட்டும் தான் துண்டு பிரசுரமாக் குடுத்தம்.மற்றது இந்தியாவில் இருக்கிற நெடுமாறன் செய்யிற அளவுக்கு உங்களால ஏன் முடியேல்ல?உங்கட எதிர்க் கட்சி தலைவர் பதவியால என்ன நன்மை.
கேள்வி: எண்டாலும் எங்களை நாங்களே ஆளுற இந்த உள்ளுராட்சியை யு.என்.பி க்காறரிட்டை விடேலுமோ?இந்த சந்தர்பத்தையும் விட்டிடேலுமோ?
பதில்: (நான்) எங்களை நாங்கள் ஆளுறதோ?போன உள்ளுராட்சித் தேர்தலில் திருகோணமலையிலா போட்டியிட்ட வெற்றிவேலு என்ன சொன்னவர்?திருமலை பஸ் நிலையப் பிரச்சனைக்குத் தீர்வுகாணுவன் எண்டவர்.நகர சபைக்குச் சொந்தமான பஸ் நிலையப்பகுதிக்குள் சட்டவிரோதமாக கடை போட்டுக்கொண்டு கலவரங்களில முழுமூச்சா ஈடுபடுற அவங்கள தன்னைத் தானே ஆளுற உள்ளுராச்சி அதிகாரத்தால என்ன செய்ய முடிஞ்சுது?ஏன்? வவுனியவில நகரசபைக்குச் சொந்தமான இடத்தில திடீர்ரெண்டு கொண்டுவந்து வச்ச புத்தர் சிலையை உங்களால அகற்ற முடிஞ்சுதோ?அதுக்கு இப்ப பொலீஸ் காவலுமெல்லோ?ஐனாதிபதி வரைக்கும் போனீர்கள்.அவரும் அகற்றுறனெண்டார்.என்ன நடந்தது?ஏன்?நான் கேக்கிறன்-யாழ்பாணம் சுப்பிரமணியம் பூங்காவுக்கு முன்னால புத்தர் சிலைய கொண்டந்து வச்சா உங்களால என்ன செய்ய முடியும்?தங்களைத்தான் ஆளுறதெண்டா இதுக்கொன்ன செய்யிறதெண்டு சொல்லுங்கோ !வவுனிவில புத்தர் சிலை அகற்ற-திருகோணமலை பஸ்நிலையத்தில் சட்டவிரோதமாக குடியிருக்கிற காடையரை வெளியேற்ற உங்களால முடியுமெண்டா? இந்தத் தேர்தலிலயும் போட்டியிடுங்கோ!ஒரு வேட்பாளராவது இதற்குப் பதில் கூறவில்லை
அத் தேர்தலில் எமது பகிஷ்கரிப்புச் கோரிக்கைக்குக் கிடைத்த ஆதரவு கூட்டணியினருக்கு எச்சரிக்கையாக இருந்தது.அந்தக் கட்டத்தில் கூட அவர்கள் போராட்டத்தின் பக்கம் நிற்க முயற்சிக்கவில்லை
எந்த அரசியல்வாதியும் தமிழீழம் என்ற சொல்லை உச்சரிக்காமல் இங்கே அரசியல் நடத்த முடியாது என்ற உண்மையை எதிரிகள் கூட மறுக்கமாட்டார்கள்(தெல்லிப்பளை ப.நோ.கூ.ச.இல் இடம்பெற்ற களத்தில் அமிர் என்ற நூல் வெளியிட்டு விழாவில்- 02.05.1983 வீரகேசரி) என்று தனோ கூறியதை அமிர் மறந்ததால் மக்களும் அவரை மறந்தனர்.
நான்கு துப்பாக்கி வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்று திரு அமிர்தலிங்கம் கேட்டதுபோலவே கொரில்லாத் தாக்குதல் மூலம் மக்களை அணிதிரட்ட முடியாது என்று தமது கோழைத் தனங்களை சித்தாந்தப் போர்வை கொண்டு மறைத்தன பெரும்பாலான இயக்கங்கள்.ஆயினும் பின்னர் மெல்ல மெல்ல எமது வழிக்கே வர வேண்டிய தேவையை வரலாறு அவர்களுக்குப் போதித்தது.
இப்போது துப்பாக்கிக்கு மேல் பீரங்கி என்ன.உலங்கு வானுர்திகள்,குண்டு வீச்சு விமானங்கள் பீரங்கி படகுகள் என்பனவந்து விட்டன.அமிர்தலிங்கத்தின் அன்றைய கேள்விக்கு எமது மண்ணில் எம்மீது போர்தொடுத்த இந்திப்படையின் தளபதி ஜெனரல் ஹர்கீர்த்சிங் இவ்வாறு பதிலளிக்கிறார்” விடுதலைப்புலிகள் நன்கு பயிற்சி பெற்றுள்ளார்கள் பல நவீன புதுமையான கருவிகள் அவர்களிடம் உள்ளன வயர்லெஸ் எதிர் தாக்கும் டாங்கிகள் ஏ.கே 47, 5.56 துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களையும் வைத்துள்ளனர்.அவர்கள் தாமாகவே சில தொழில்நுட்பங்களை உருவாக்கினார்கள்.ஈழம் என்ற இலட்சியத்திலிருந்து அவர்கள் ஒரு போதும் விட்டுக்கொடுக்கவில்லை-(பம்பாயிலிருந்து வெளியாகும் வீக்லி இதழில்)
ஜெனரல் ஹர்கீர்த்சிங்கின் கூற்றை சிறீலங்காவின் கூட்டுப்படைத் தளகர்த்தர் ஜெனரல் ஹமில்டன் வனசிங்காவும் பின்வருமாறு உறுதிப்படுத்துகின்றார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது உலகிலேயே மிகத் தலைசிறந்த ஒரு கொரில்லா அமைப்பாகும் இந்த இயக்கம் சிறந்த பயிற்சியையும் இறுக்கமான கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளது.விடுதலைப் புலிகளுக்கு தலைமை தாங்கி சிறீலங்கா பாதுகாப்பு படைகளுக்கு எதிராக யுத்தத்தை நடாத்தி வரும் பிரபாகரன் ஆற்றலுள்ள தலைவர் என்பதை நிரூபித்துள்ளார்-(08.03.92 சண்டே ரைம்ஸ்)
வெளிச்சம் இதழ்
கரும்பறவை
காக்கா அண்ணை
பசீர் காக்கா
