செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்குமான அகழ்வாராய்ச்சி மற்றும் விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி 1000ற்கும் மேற்பட்ட மக்கள் எழுச்சியுடன் தற்போது நடைபெற்று வருகிறது. தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவேந்தல் மாதத்தில் அவர் கண்ட மக்கள் எழுச்சி மீண்டும் வெடித்துள்ளது.
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பான சான்றுப் பொருட்களை பாதுகாப்பதற்கும், சர்வதேச தடய அறிவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.
தமிழ்த் தேசியப் பேரவையும் குடிசார் அமைப்புக்களும் இணைந்து முன்னெடுக்கும் இப்பேரணியில் குடிசார் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், கல்வி மற்றும் உயர் கல்விச் சமூகத்தினர், தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
2026 செப்டம்பர் 13ஆம் திகதி காலை 10.00 மணிக்கு யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள கைலாசபிள்ளையார் கோவில் முன்றலில் பேரணி ஆரம்பிக்கப்பட்டு, கோவில் வீதி ஊடாக முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள கிட்டு பூங்கா (சங்கிலியன் பூங்கா) நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அங்கு பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.










